India

வங்கிகளை ஏமாற்றிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 68,000 கோடி கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு: அதிர்ச்சி தகவல்!

வங்கிகளில் பல கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பியோடிய விஜய் மல்லையா, மெகுல் சோக்‌ஷி, நீரவ் மோடி உட்பட 50 பேரின் 68,000 கோடி ரூபாய் கடனை வங்கிகள் தள்ளுபடி செய்த அதிர்ச்சி தகவல் ஆர்.டி.ஐ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுவனங்கள் தொழில்துறைகள் என முடங்கி நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி வரி வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

தொழில்துறையினருக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி நிதி வழங்கும் அளவுக்கு வங்கிகளின் நிலை படு மோசமாக உள்ளது. இத்தனைக்கும் நடுவில் மோசடி செய்தவர்களின் 68,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்தாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தகவலை சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனுதாக்கல் செய்து உண்மையை வெளிச்சத்துக் கொண்டுவந்துள்ளார். சாகேத் கோகலே தாக்கல் செய்த ஆர்.டி.ஐ மனுவிற்கு ரிசர்வ் வங்கியின் பொது தகவல் அதிகாரி அபய் குமார் அளித்த தகவலில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி நிலுவையில் இருந்த 68,607 கோடி ரூபாய் கடனை கணக்கீட்டு முறையின் மூலம் தள்ளுபடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதில் தள்ளுபடி செய்யப்பட்ட நிறுவங்கள் தொடர்பான தகவலில், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் 5,492 கோடி கடனும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் 5,492 கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து வெளிநாடுக்கு தப்பிச்சென்ற மெகுல் சோக்ஷியின் நிறுவனமாகும்.

அந்த நிறுவத்தின் மற்றொரு நிறுவனங்களான கிலி இந்தியாவின் 1,447 கோடி கடனையும், நக்‌ஷத்ரா பிராண்ட்ஸ் நிறுவனத்தின் 1,109 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மெகுல் சோக்ஷி ஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு இந்தியாவில் இருந்து தப்பி ஆண்டிகுவா என்ற நாட்டில் குடியுரிமை பெற்று தலைமறைவாக உள்ளார்.

இவரது உறவினர் நிரவ் மோடியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து லண்டனில் உள்ளார். அவரைத் தொடர்ந்து விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனத்திற்உ 1,943 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுபோல், சந்தீப் ஜூஜூன்வாலா மற்றும் சஞ்சய் ஜூஜூன்வாலாவின் ரெய் அக்ரோ நிறுவன கடன் 4,314 கோடியும்,

வைர வியாபாரி ஜதின் மேத்தாவின் வின்சம் டயமன்ட் ஜூவல்லரி நிறுவன கடன் ரூ 4076 கோடியும், கன்பூரை சேர்ந்த ரோட்டோமேக் நிறுவனத்தின் ரூ.2850 கோடி கடன் மற்றும் பஞ்சாப் குடோஸ் செமீ நிறுவனம் 2,326 கோடி ரூபாயும், ருசி சோயா இண்டஸ்டிரீஸ் 2,212 கோடி ரூபாயும், ஜூம் டெவலப்பர்ஸ் நிறுவனம் 2,012 கோடி ரூபாயும், அகமதாபாத்தை சேர்ந்த ஹரீஸ் மேத்தாவின் பார்எவர் பிரீசியஸ் ஜூவல்லரி டயமண்ட்ஸ் 1,962 கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் 1,000 கோடி ரூபாய்க்கு கீழ் கடன் வாங்கிய 25 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் கடன் 605 கோடி ரூபாய் முதல் 984 கோடி ரூபாய் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட 50 கடன் மோசடியாளர்களில் அதிக கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 6 பேர் வைரம் மற்றும் நகை தொழில்துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக சாகேத் கோகலே கூறுகையில், கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட்கூட்டத்தொடரில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். இருப்பினும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்குர் இதற்கு பதில் அளிக்கவில்லை.

இதை தொடர்ந்து, கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த விவரங்களை வழங்குமாறு, ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் மனு தாக்கல் செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “75% ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்ய ஏற்பாடு” : டி.சி.எஸ் நிறுவனம் அதிரடி திட்டம்!