India

காவிரி ஆணையம் : கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் நிலையில் தமிழக மக்களின் தலையில் இடியை இறக்கிய மோடி அரசு!

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் நதிநீர் பங்கீடு விவகாரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 18ந்தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசின் துணையோடு அதிகாரமற்ற வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய பா.ஜ.க அரசு. மேலும், அ.தி.மு.க அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை கூட்டுவதற்கோ உரிய தண்ணீரைப் பெறுவதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தனித்தலைவரை நியமிக்கக்கோரி தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தியும் அதை கண்டுகொள்ளாத மோடி அரசு, மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவரையே காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக நியமினம் செய்து கவனித்து வந்தது.

இந்நிலையில், தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை, மத்திய அரசின் நீர்வளத்துறையான ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வந்து, அதிகாரமற்ற அமைப்பாக மாற்றி, அதன் செயல்பாடுகளை முடக்கி உள்ளது பா.ஜ.க அரசு.

இதனால், காவிரி மேலாண்மை ஆணையம் தன்னிச்சையான ஆணையம் என்ற சிறப்பை இழந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையில், இத்தகைய அரசாணையை வெளியிட்டு தமிழக மக்களை வஞ்சித்துள்ளது பா.ஜ.க அரசு. வழக்கம்போல், பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கையையும் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டு தமிழக விவசாயிகளுக்கு துரோகமிழைக்கப் போகிறது எடப்பாடி அரசு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் நடத்திய போராட்டங்களின் விளைவாக அமைக்கப்பட்ட ஆணையத்தை அதிகாரமிழக்கச் செய்து வேடிக்கை பார்க்கிறது தமிழர் விரோத அ.தி.மு.க அரசு என கண்டனங்கள் எழுந்துள்ளன.

Also Read: “அரசின் சதியால் காய்கிறது காவிரி பூமி” : விவசாயிகள் கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!