India

உத்தர பிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை - கிராம பஞ்சாயத்தில் நீதி கிடைக்காததால் இளம் பெண் தற்கொலை!

பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசம் பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரமாக மாறியிருக்கிறது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போதுவரை நாட்டிலேயே அதிகமான பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகியிருக்கும் மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது.

நாட்டையே பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு மிக முக்கிய பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் உத்தர பிரதேசத்தில் தான் நடைபெற்றுள்ளன. ஆனால், இன்னும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்காமல், அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் சமீபத்தில் தனது அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக ஊரடங்குக் காலத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை பா.ஜ.க அரசு அமைத்துக் கொடுக்கவில்லை. அதன்விளைவாக, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டட இளம் பெண் ஒருவர் கிராம பஞ்சாயத்தில் தனக்கு நீதி கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் கடந்த வாரம் வீட்டில் இருந்த இளம் பெண் ஒருவர், இரண்டு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பின்னர் இதுதொடர்பாக கிராம பஞ்சாயத்தில் இளம் பெண் புகார் அளித்துள்ளார்.

புகாரை விசாரித்த கிராம பஞ்சாயத்து தலைவர்கள் வன்கொடுமை செய்த இரண்டு இளைஞர்களையும் எச்சரித்து பிரச்சனையை முடித்து வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண், தனக்கு நீதிக் கிடைக்கவில்லை என்ற விரத்தியில் வீட்டிற்குச் சென்று தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அலிகார் பகுதி காவல்துறையினர், இளம் பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இளைஞரைகளையும் கைது செய்த போலிஸார் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சகோதரி அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: கொரோனா ஊரடங்கால் உண்ண உணவில்லாமல் 5 குழந்தைகளை கங்கையில் வீசிய தாய் - உத்தர பிரதேசத்தில் நடந்த சோகம்!