India
#Covid19 : “உயிரிழக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம்” - ஒடிசா அரசு அறிவிப்பு!
கொரோனாவுக்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை18 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை தடுக்க ஒடிசா மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு கொரோனா கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் கொரோனாவால் 79 பேர் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உயிரிழக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :
“அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் உதவியாக உள்ளவர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும்.
அவர்களது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். அவர்களின் ஈடு இணையில்லாத பணியைப் பாராட்டி விருது வழங்கப்படும். கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடுவோருக்கு மக்கள் ஆதரவும், நன்றியும் தெரிவிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்கள் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!