India

கொரோனா பாதித்தவருக்கு நிதியுதவி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிய மருத்துவர்கள்- குண்டூரில் அதிர்ச்சி சம்பவம்!

குண்டூர் மாவட்டத்தில் உள்ள காட்டூரி மருத்துவக் கல்லூரியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே பெயருடைய இருவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதில் 52 வயதுடைய நபரும் மற்றொருவருக்கும் நடந்த பரிசோதனையில் 52 வயதுடையவருக்கு தொற்று இருப்பது சோதனை முடிவின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், ஒத்த பெயருடைய காரணத்தால் தவறுதலாக தொற்று இல்லாதவருக்கு பதில் வைரஸ் தொற்று உள்ளவரை ரூ.2 ஆயிரம் அரசு நிதியுதவி கொடுத்து வீட்டுக்கு நேற்று முன் தினம் அனுப்பி இருக்கிறார்கள். அதன் பிறகு நேற்று காலை உண்மை தெரியவந்துள்ளது.

உடனடியாக தாடேபல்லி பகுதியில் உள்ள 52 வயது நபரை அழைத்து வர மருத்துவக் குழுவும், போலிஸும் சென்றிருக்கிறது. அங்கு நடந்தவற்றை கூறியும் ஏற்க மறுத்த கொரோனா பாதித்த நபர் மருத்துவமனைக்கு வரவும் மறுத்துள்ளார். பின்னர் போலிஸார் உதவியோடு அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

வீட்டுக்கு அனுப்பப்பட்ட அந்த ஒரு நாளில் அவருடன் இருந்த குடும்பத்தினர் நால்வரும் பரிசோதனைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், குழப்பத்தை ஏற்படுத்திய மருத்துவக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குண்டூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Also Read: மருந்து வாங்கச் சென்றவரை சராமாரியாக தாக்கிய போலிஸ்... இளைஞர் பலி - மருத்துவமனை முன்பு பதற்றம்! #Lockdown