Modi
India

“இந்தியாவின் பொருளாதாரா வளர்ச்சி 40 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட மோசமாகும்” : உலக வங்கி அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் கொரோனா பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் பரவிய வைரஸ் இன்னும் உலகில் உள்ள 180 நாடுகளை தன்வசப்படுத்தியுள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று, வல்லரசு அமெரிக்காவே வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் காவு வாங்கப்படும் மக்களை புதைக்கும் ஏற்பாட்டை செய்து வருகிறது.

இந்த சூழலில், இந்தியாவில் ஏற்கெனவே இருந்த பொருளாதார பிரச்சனைக்கு மத்தியில் கொரோனா இந்தியாவை நிலைக் குழையச் செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பொருளாதார சீர்திருத்தத்தைவிட இந்தாண்டு மோசமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, உலக வங்கி தெற்காசிய பொருளாதார பார்வை குறித்த அறிக்கையை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2021 நிதியாண்டில் 1.5 - 2.8 சதவீதமாக இருக்கும். தெற்காசிய நாடுகள் இந்த ஆண்டு 1.8 சதவீதம் முதல் 2.8 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சியைக் காட்டக்கூடும்.

இந்தியா மட்டுமல்லாது இலங்கை, நேபாளம், பூடான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளும் பொருளாதார வளர்ச்சியில் கடும் வீழ்ச்சியைக் காணும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவு ஆகிய மூன்று நாடுகள் மந்தநிலையைச் சந்திக்கும்.

கொரோனா வைரஸை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தெற்காசியா முழுவதும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அதுமட்டுமின்றி, கொரோனா தாக்கத்தால் இந்தியாவில் 1.3 பில்லியன் மக்கள் வேலைகளிலிருந்து வெளியேறிவிட்டனர்.

சிறுகுறு தொழில்கள் நலிவடைந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்த இடங்களிலிருந்து சொந்த கிராமங்களுக்கு திரும்பிவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளது.

தெற்காசிய பொருளாதார பார்வை அறிக்கை வெளிட்டுள்ள பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலக வங்க அதிகாரி ஹார்ட்விக் ஷாஃபர், “தெற்காசிய நாடுகளில் ஊரடங்கு நீடிக்கப்பட்டால் பொருளாதார நிலை இன்னும் மோசமாகும்.

எனவே கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் உடல்நலத்தையும் அவர்களின் பொருளாதார நிலையையும் பாதுகாப்பது அவசியத்தை அரசு உணரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.