India

“இந்தியாவில் 40 கோடி முறைசாரா தொழிலாளர்கள் கடும் வறுமையில் தள்ளப்படும் அபாயம்” - எச்சரிக்கும் ஐ.நா!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முறைசாரா தொழிலாளர்கள் சுமார் 40 கோடி பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயத்தில் உள்ளனர் என்றும் உலகளவில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், 19.5 கோடி முழுநேர வேலைகள் அல்லது வேலைநேரத்தின் 6.7 சதவீதம் அழிக்கப்படும் என்றும் ஐ.நா.வின் தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக அளவில் முறைசாராத் தொழிலாளர்கள் 200 கோடி பேர் உள்ளனர். நைஜீரியா, பிரேசில் மற்றும் இந்தியாவில்தான் உலகிலேயே அதிக முறைசாராத் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு இவர்களின் முறைசாராத் தொழில்களை கடுமையாக பாதித்திருக்கும். அதனால் அதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் மோசமான ஏழ்மை நிலையைச் சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி தொழில்கள் முடங்கியதால் முறைசாராத் தொழிலாளர்கள் தற்போது வேலையின்றித் தவித்து வருகின்றனர்.

இவர்களில் 90 சதவீதத்தினருக்கு மேல் இ.எஸ்.ஐ., பி.எஃப் போன்ற எந்தவித தொழிலாளர் நல உதவிகளும் இல்லை. பணி நிரந்தரம் என்ற உத்தரவாதமும் கிடையாது. இந்தச் சூழலில் வேலையில்லாமல் வீட்டில் இவர்களை அடைத்துவிட்டால் வருமானத்திற்கு என்ன செய்வார்கள்?

வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்வது ஒரு பெரிய கவலை என்றால், அதனை விடப் பெரிய கவலை வாழ்வதற்கு என்ன செய்வது என்பதுதான். அவர்கள் நெருக்கடியின்போது வறுமைக்குள் விழும் அபாயத்தில் உள்ளனர். அதனால் அவர்களைப் பாதுகாக்க தீவிர முயற்சி எடுக்கவேண்டும்.

இந்த கொரோனா பாதிப்பு, இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் ஏற்பட்ட மிகப்பெரிய உலகப் பேரழிவாக அமைந்துள்ளது. உலகளவில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், 19.5 கோடி முழுநேர வேலைகள் அல்லது வேலைநேரத்தின் 6.7 சதவீதம் அழிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: கொரோனாவால் சீரழிந்த பொருளாதாரம்.. 2 லட்சம் கோடி டாலர் இழக்க நேரிடும்.. இந்தியாவின் நிலைமை? ஐ.நா அறிக்கை!