India

“மருத்துவமனை கட்ட பட்டேல் சிலை விற்பனை" OLX விளம்பரத்தால் அதிர்ந்த குஜராத் போலிஸ்!

இந்தியாவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. போலிஸார் சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் போதிய கண்காணிப்பு இல்லாததால் பல போலி இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பலர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் சைபர் குற்றங்கள் பல மடங்கு அதிகரித்ததாகவும் நாளுக்கு நாள் பொதுமக்களிடம் இருந்து புகார் அதிகரித்துவருவதாகவும் சம்பந்தபட்ட துறையைச் சார்ந்த போலிஸ் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

கடந்த மார்ச் மாதத்தில் பிரபல இணையதளமான OLX மூலம் சென்னையைச் சேர்ந்த ஒருவர் வாகனம் விற்பதாக கூறி ஏமாற்றும் கும்பலிடம் சிக்கிக் கொண்டு தனது பணத்தைப் பறிகொடுத்துள்ளார்.

பின்னர் அவரின் புகாரின் பேரில் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்தனர். அதேபோல் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை OLX இணையதளத்தில் விற்க முயன்ற சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை விற்பனை செய்யவுள்ளதாக OLX இணையதளத்தில் விளம்பரம் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் சாதுபெட் என்ற இடத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சுமார் 182 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி திறந்துவைத்த அந்த சிலையை மர்ம நபர் ஒருவர் OLX இணையதளத்தில் விற்பணைக்கு உள்ளதாக விளம்பரம் செய்துள்ளார்.

மேலும் இந்த விளம்பரத்தில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் வேளையில், மருத்துவமனைக் கட்டவும், மருத்துவ உபகரணம் வாங்க அரசுக்கு பணம் இல்லாததால் அந்த சிலையை ரூ.30ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து இதுதொடர்பான புகார் குஜராத் போலிஸுக்கு அளிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து அந்த விளம்பரம் OLX-லில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து அந்த விளம்பரத்தை கொடுத்த மர்ம நபர் குறித்தவிசாரணையை போலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இராணுவ அதிகாரி எனக் கூறி OLX மூலம் பல கோடி மோசடி : தீரன் பாணியில் மோசடி கும்பலை கைது செய்த போலிஸ்! #Crime