India

#CoronaAlert அதிகளவில் பாதிப்படையும் இளைஞர்கள்.. இது இந்தியாவின் நிலை.. மத்திய அரசு எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையில் வயதானவர்களை விட இளையவர்களுக்கே அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறியுள்ளார்.

இதுவரையில், பாதிக்கப்பட்ட 3730 பேரில் 294 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால், மீதமுள்ள 3,332 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், 104 பேர் உயிரிழந்திருப்பதும் ஒரு வகையில் மக்களிடையே அதிருப்தியையும், அச்சத்தையுமே ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், உலக அளவில் இந்த கொரோனா எனும் கொடிய நோய்க்கு பெரும்பாலும் முதியவர்களாகவே இருக்கின்றனர். ஆகையால் அவர்களின் வயது மூப்பு காரணமாகவும், நீரிழிவு போன்ற உடல் உபாதையால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமையாலும் கொரோனாவை எதிர்த்து போராட முடியாத சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே அவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.

ஆனால், இந்த கொரோனா வைரஸ் இளைஞர்களை தாக்காது என்றும், அப்படியே தாக்கினாலும் உயிரிழப்பு வரை கொண்டு செல்லாது என்பன போன்ற வதந்திகள் உலா வருகின்றன. இது தொடர்பாக ஏற்கெனவே உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் பேசிய போது, இளைஞர்கள் ஒன்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியாதவர்கள் அல்ல. கொரோனாவால் பாதிக்கப்பட்டால் வாரக்கணக்கில் மருத்துவமனைகளில் முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகும். சமயங்களில் உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்திருந்தார்.

Also Read: இளைஞர்களையும் கொரோனா தாக்கும் - அலட்சியம் வேண்டாம் என WHO எச்சரிக்கை! #CoronaAlert 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவிகிதம் பேர் 21 முதல் 40 வயதை உடையவர்கள்தான் என மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறியுள்ளார். நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அவர், 20 வயதுக்குட்பட்டவர்கள் 9 சதவிகிதமும், 41-60 வயதுக்குட்பட்டவர்கள் 33 சதவிகிதமும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 17 சதவிகிதம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

ஆகவே இளைஞர்களே பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனித்திருந்து கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம்.

Also Read: “Lifestyle மாற்றத்தால் இந்திய இளைஞர்கள் 30 வயதிலேயே இறக்கின்றனர்” : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!