India

“மது என சானிடைசரை குடித்த சிறைக்கைதி பலி” - கேரளாவில் நிகழ்ந்த விபரீதம் : அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்ட மாநிலங்களில் கேரளா இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு கேரளாவில் அதிகரிக்கும் நிலையில் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் கேரளாவில் இதுவரை 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் கடுமையாக ஊடரங்கை அம்மாநில போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலங்களில் பல இடங்களில் சானிடைசர், முகக் கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு கேரள அரசின் உத்தரவின் பேரில் அங்குள்ள சிறைகளில், சானிடைசர் தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், பாலக்காட்டில் உள்ள சிறைச் சாலையில் கைதிகளை வைத்து முகக் கவசம், கை கழுவுவதற்கு பயன்படும் சானிடைசர் உள்ளிட்டவற்றை தயாரித்து வருகின்றனர். இந்த சிறைக்கு ராமன் குட்டி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி ரிமாண்ட் செய்யப்பட்டு சிறைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சிறைக் காவலர் ரோந்துப் பணியில் ஈடுபடும்போது ராமன் குட்டி சிறைக்கும் பேச்சு மூச்சின்றி, சரிந்து கிடந்துள்ளார். சிறைக் காவலர் கூச்சல் எழுப்பியும் எழாத நிலையில், சிறைக் கதவை திறந்து பார்த்தபோது ராமன்குட்டி சடலமாகக் கிடந்துள்ளார்.

இதனையடுத்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராமன் குட்டி உயிரிழந்தது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கைகழுவும் சுத்திகரிப்பானில் ஆல்கஹால் வாசனை வருவதை உணர்ந்து, மது என நினைத்து ராமன் குட்டி அதை அருந்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் எனத் தெரியவந்தது.

இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து கேரள போலிஸார் விசாரணை நடத்தி வருகிறனர். இந்தச் சம்பவம் சக கைதிகள் மத்தியிலும் சிறைக்காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “கடைகளில் தட்டுப்பாடு; 10 நாளில் 1 லட்சம் Sanitizers தயாரிக்கும் கேரளா” : பினராயி அரசு அசத்தல் நடவடிக்கை!