India

“இப்போதைய தேவை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான்; சென்சஸ் அல்ல” - மோடி அரசுக்கு CPIM கோரிக்கை!

கொரானோ வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து, அதற்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்பதால், சென்சஸ் கணக்கெடுப்பை (மக்கள் தொகை கணக்கெடுப்பு) ஏப்ரல் 1ம் தேதி தொடங்காமல் ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரானோ வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து, மக்கள் சமூகத்தில் ஒருவருக்கொருவர் நெருங்காமல் தனித்திருக்க வேண்டியது போன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஏப்ரல் 1 முதல் தொடங்குவதாக அறிவித்த தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக் கணக்கெடுப்பை அரசு கைவிட வேண்டும் என்று உறுதியுடன் கருதுகிறது.

அரசாங்கமும் அதன் அனைத்து அமைப்புகளும் ஒரே குறிக்கோளுடன் இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும், அதன் மூலம் மக்களின் நலனுக்கும் வாழ்க்கைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா அச்சத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும்.

ஏற்கனவே 13 மாநில அரசாங்கங்கள் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு/தேசிய குடிமக்கள் பதிவேட்டு நடைமுறைக்குத் தங்கள் எதிர்ப்பினைப் பிரகடனம் செய்திருக்கின்றன.

சென்சஸ் கணக்கெடுப்பையும் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை ஒத்தி வைத்திட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளது.

Also Read: “கைதட்டல் தேவையில்லை; பாதுகாப்பு உபகரணங்களே உடனடித் தேவை” : கொரோனாவை தடுக்க திட்டம் எங்கே மிஸ்டர்.மோடி?