India
“கொரோனா விடுமுறை நாட்களிலும் வீடுகளுக்கே செல்லும் மதிய உணவு” - கேரளாவில் பினராயி விஜயன் அசத்தல்!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது வரை 75 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, கேரளாவில் கடந்த சில நாட்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதாவது, நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
அதேபோல், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டுப் பயண விவரங்களை மறைப்பது குற்றமாக கருதப்படும் என கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மற்றும் தடுப்பு நடவடிக்கைக்கு 150 கோடியை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், மக்கள் கூடும் திரையரங்குகளையும் மூட உத்தரவிடப்பட்டது. மார்ச் 31ம் தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களையும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் வழங்கும் சத்துணவை நம்பி இருக்கும் சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்ட கேரள அரசு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும் பள்ளியில் வழங்கும் மதிய உணவை மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, அம்மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் பள்ளியில் உணவு சமைத்து அருகில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கே சென்று உணவை வழங்கி வருகின்றனர்.
அப்படி, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று உணவு வழங்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் கேரள அரசின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!