India

ATM மையங்களில் கேமரா வைத்து தகவல் திருட்டு : மோசடியில் ஈடுபட்ட நைஜீரியா பெண் உள்ளிட்ட மூவர் கைது!

போலி ஏ.டி.எம் கார்டுகள் தயாரித்து பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்ட நைஜீரியா பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா பூதகுப்பி கிராமத்தை சேர்ந்தவர் கீதா சிவலிங்கய்யா. இவரது வங்கிக் கணக்கில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.49 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதாக, அவரது செல்போனுக்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இதுதொடர்பாக சைபர் கிரைம் மற்றும் பொருளாதார குற்றத்தடுப்பு (சி.இ.என்) போலிஸில் கீதா புகார் கொடுத்தார்.

போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பூதகுப்பி கிராமத்தில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் இருந்துதான், கீதா பெயரிலான போலி ஏ.டி.எம். கார்டு மூலம் 4 முறை ரூ.49 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க சைபர் கிரைம் போலிஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தனிப்படை போலிஸார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 3 பேரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் நைஜீரியா நாட்டை சேர்ந்த அலுகா சன்ட்ரா ஒரேவா (26), ஹென்ரி (25), மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த விஜய் தாமஸ் (25) எனத் தெரியவந்தது. இவர்களில் அலுகா, ஹென்ரி ஆகியோர் படிப்பு தொடர்பான விசாவில் இந்தியாவுக்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் பெங்களூருவில் தங்கி இருந்துள்ளனர்.

பெங்களூருவில் அலுகா, ஹென்ரி, விஜய் தாமஸ் உள்ளிட்டோர் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். அதற்குத் தேவையான பணத்திற்காக பெங்களூரு மற்றும் ராமநகர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் இருக்கும் எந்திரங்களில் சிறிய அளவிலான கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

அந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலம் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம் கார்டுகளின் தகவல்கள் அனைத்தையும் திரட்டியுள்ளனர். அந்த தகவல்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் பெயரில் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்துள்ளனர். அந்த கார்டுகள் மூலமாக ஏ.டி.எம் எந்திரங்களுக்கு சென்று பணம் எடுத்து, அதன்மூலம் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இதுபோன்று மோசடியில் ஈடுபட்டு இவர்கள் போலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். கைதான 3 பேரின் நண்பர்கள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜாமினில் எடுக்க பணம் தேவைப்பட்டதால், அதற்காகவும் ஏ.டி.எம். மையங்களில் போலி கார்டுகள் மூலம் பணம் எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.

கைதான 3 பேர் மீதும் ராமநகர் மாவட்டத்தில் மட்டும் 44 வழக்குகளும், பெங்களூரு சைபர் கிரைம் போலிஸில் 6 வழக்குகளும், சித்ரதுர்கா மாவட்டத்தில் 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் 3 பேரும் கைதாகி இருப்பதன் மூலம் அந்த 54 வழக்குகளிலும் தீர்வு காணப்பட்டுள்ளது.

கைதானவர்களிடம் இருந்து 4 பாஸ்போர்ட்டுகள், மடிக்கணினிகள், செல்போன்கள், போலி ஏ.டி.எம் கார்டுகள், சிறிய அளவிலான நவீன கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் 3 பேர் மீதும் சைபர் கிரைம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: இராணுவ அதிகாரி எனக் கூறி OLX மூலம் பல கோடி மோசடி : தீரன் பாணியில் மோசடி கும்பலை கைது செய்த போலிஸ்! #Crime