India

மோடியின் ‘நோ சோசியல் மீடியா’ பதிவுக்கு என்ன காரணம் தெரியுமா? - இது மற்றொரு மோடி மஸ்தான் வேலை!

கறுப்பு பணத்தை ஒழிப்பதாகச் சொல்லி, 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்து நாட்டு மக்களை இதுவரை திண்டாட வைத்த மோடி அரசு, தற்போது மக்களின் போராட்டங்களுக்கு உறுதுணையாக உள்ள சமூக வலைதளங்களுக்கும் வேட்டு வைக்க பார்க்கிறது.

நேற்றைய தினம், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் வருகிற ஞாயிற்றுக் கிழமை அன்று வெளியேறப்போவதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அது முதல் பரபரப்புக்கும், எதிர்ப்பார்ப்புக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.

எதற்காக பிரதமர் இப்படி தெரிவித்திருக்கிறார், என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்பன போன்ற பல்வேறு கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியோ, வெறுப்பை விட்டுக்கொடுங்கள், சமூக வலைதளங்களை அல்ல என மோடிக்கு அட்வைஸ் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் போராட்டங்கள் நடைபெறுவதற்கு மக்களுக்கு பெரும் உதவியாக இருப்பது சமூக வலைதளங்கள்தான். அதன் மூலம் மக்கள் அரசுக்கு எதிராக தத்தம் கருத்துகளை தெரிவித்து வருகின்றன. அண்மைக் காலங்களாக சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர் சட்டங்களை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆகையால் இந்தியாவுக்கு என பிரத்யேகமான சமூக வலைதளங்களை உருவாக்குவதற்காகவே மோடி விலகவுள்ளார் என்றும் பேசப்படுகிறது.

மேக் இன் இந்தியா திட்டம் மூலம் சமூக வலைதளங்களை உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு அறிவித்தால் சர்ச்சைகள் எழலாம் என்பதனாலேயே மோடி முதலில் சூசகமாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உலகளவில் சமூக வலைதளங்களின் பயன்பாடு எந்த அளவுக்கு அதிகமாகவுள்ளதே அதே அளவுக்கு இந்தியாவிலும் உள்ளது.

ஆகயால் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை போல சமூக வலைதளங்களை நீக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டால் பன்மடங்கு பிரச்னை ஏற்படும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.