India

“ஓராண்டில் ரூ.42,000 கோடி லஞ்சம்” : நெடுஞ்சாலையில் போக்குவரத்து போலிஸார் வசூல் வேட்டை - அதிர்ச்சி தகவல்!

நாடு முழுவதும் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை போலிஸார் நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் அதில் சரக்கு லாரி போன்ற வாகன ஓட்டிகளிடம் உரிமையுடன் லஞ்சம் பெறும் அவல நிலை உருவாகியுள்ளதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர்.

அப்படி நெடுஞ்சாலைத் துறை போக்குவரத்து போலிஸார் கடந்த ஓராண்டில் மட்டும் 48,000 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தன்னார்வ அமைப்பு வெளிக்கொண்டுவந்துள்ளது.

‘சேவ் லைப் ஃபவுண்டேஷன்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு நாடு முழுவதும் போக்குவரத்து அதிகமுள்ள 10 நகரங்களைத் தேர்வு செய்து லஞ்சம் வாங்குவது தொடர்பாக ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு குறித்த தகவலை மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் சரக்குகளை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல போக்குவரத்துத் துறைக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர்.

தொழில் நடத்துவதற்காக லாரி உரிமையாளர்கள் ஓரிடத்தில் அதாவது ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறார்கள் என்றால், லாரிகளை மாநிலத்துக்கு மாநிலம் ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களும் போக்குவரத்து போலிஸாருக்கும், நெடுஞ்சாலை துறை ஊழியர்களுக்கும் லஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சாலைப் போக்குவரத்தில் சுமார் 82 சதவீதம் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் வழக்கமாக தாங்கள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போலிஸார் மற்றும் சோதனைச்சாவடி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துச் செல்வதை ஒப்புக் கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகளுக்கே லஞ்சம் கொடுத்துத்தான் லாரியை இயக்கவேண்டி உள்ளதாக ஏராளமானோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஒரு லாரி ஒருமுறை சரக்குகளை ஏற்றிக்கொண்டு உரிய இடத்தில் இறக்கிவிட்டு அங்கிருந்து திரும்பும் வரை சுமார் 1,257 ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டி இருக்கிறதாம். அதன்படி கடந்த ஓராண்டில் மட்டும் 48,000 கோடி ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தால், வாகனப் பதிவு மற்றும் வாகன உரிமம் புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு ஆர்.டி.ஓ அலுவலகம் சென்றாலே லஞ்சம் கொடுக்கவேண்டிய சூழல் நிலவுகிறது. லஞ்சம் கொடுக்காமல் தொழில் செய்ய முடியாது என்ற நிலை இருப்பது இந்த ஆய்வு அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.

Also Read: “மதவெறியைத் தூண்டும் பா.ஜ.கவில் இனி இருக்கமுடியாது”- டெல்லி கலரவத்தால் கட்சியில் இருந்து வெளியேறிய நடிகை!