India

“டெல்லி வன்முறையின்போது செயலற்று நின்ற போலிஸ்” : மோடி அரசுக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணையர் ஆவேசம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகப் போராடியவர்கள் நடத்திய வன்முறையால் வடகிழக்கு டெல்லியில் பெரும் மோதல் வெடித்தது. இஸ்லாமியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த மத மோதலில் இஸ்லாமியர்களின் மசூதிகள், வீடுகள், கடைகள் ஆகியவை சூறையாடப்பட்டுள்ளன.

இந்த வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கலவரம் ஏற்பட்டுள்ள டெல்லியின் நிலைமை கவலை அளிப்பதாகவும், வன்முறையை உன்னிப்பாக ஐ.நா. கவனிப்பதாக ஐ.நா-வின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார். இந்நிலையில் டெல்லி கலவரத்தில் போலிஸ் செயல்படாமல் இருந்தது மிகவும் கவலை அளிப்பதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உயர் ஆணையரும் கூறியுள்ளார்.

ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பின் 43வது ஆலோசனைக் கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உயர் ஆணையர் மிச்செல் பேச்லட், “இந்தியாவில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் உருவான டெல்லி கலவரத்தில் போலிஸ் செயல்படாமல் இருந்தது மிகவும் கவலை அளிக்கிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பெரும்பாலான இந்தியர்களும், அமைதியான முறையிலேயே இச்சட்டத்திற்கு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் டெல்லி கலரத்தின் போது இஸ்லாமியர்களுக்கு எதிராக சில பிரிவினர் தாக்குதல் நடத்தியபோது காவல்துறையினர் பாராமுகமாக செயலற்று நின்றிருக்கிறார்கள். மேலும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலிஸாரே ஏவி விடப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: மோடி அரசால் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு அவப்பெயர் : டெல்லி கலவரத்தை சாடிய ஐ.நா. பொதுச்செயலாளர்!