India

"எப்போது FIR போடுவீர்கள்? நகரமே தீக்கிரையான பிறகா?” - டெல்லி போலிஸை விளாசிய ஐகோர்ட்!

வடகிழக்கு டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பா.ஜ.க குண்டர்கள் கண்மூடித்தனமாக தாக்கி, வன்முறை வெறியாட்டம் நடத்தியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வன்முறையால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்களை சூறையாடி அங்கு இந்து அமைப்புகளின் கொடியை நிறுவி அராஜகப் போக்கை கடைபிடித்துள்ளது இந்துத்வா கும்பல். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் வாய் பொத்தி, கைகட்டி டெல்லி போலிஸ் வேடிக்கை பார்த்ததும், வன்முறையாளர்களுக்கு ஆதரவாக இருந்ததும் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் மூலம் தெளிவானது.

இந்நிலையில், டெல்லியில் நடந்த கலவரத்துக்கு யார் காரணம் என சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன் மற்றும் தல்வந்த் சிங் அமர்வு பிற்பகலுக்கு ஒத்திவைத்து டெல்லி காவல்துறை ஆணையரை ஆஜராகும்படியும், வன்முறையின்போது பதிவான சி.சி.டி.வி காணொளிகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

பின்னர் வழக்கு விசாரணைக்கு வந்த போது, வன்முறையைத் தூண்டும் வகையில் பா.ஜ.கவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் ஆகியோர் பேசிய வீடியோக்களை பார்க்கவில்லையா என போலிஸ் தரப்பிடம் நீதிபதி முரளிதரன் கேட்டுள்ளார். அதற்கு போலிஸ் தரப்பு இல்லை என்றதும் கோபமடைந்த முரளிதரன், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, காவல்துறை அதிகாரி ராஜேஷ் தியோ உள்ளிட்டோர் முன்னிலையில் கபில் மிஸ்ரா ஆகியோர் பேசியதை ஒளிபரப்பியுள்ளார்.

இதுதொடர்பான செய்திகளை அனைத்து செய்தி சேனல்களும் ஒளிபரப்பியுள்ளன. காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருக்கும் ஒரு டி.வி.யில் கூடவா போலிஸார் பா.ஜ.கவினர் பேசியதை பார்க்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக போராட்டக்காரர்கள் மீது FIR பதவி செய்ய முடிந்தபோது, ஏன் வெறுப்பை உமிழும் அரசியல் கட்சியினர் மீது FIR பதியவில்லை என சொலிசிட்டர் ஜெனரலிடம் வினவியுள்ளார்.

மேலும், வன்முறை உருவாகி, பல உயிர்கள் பலியாகி, நகரமே தீக்கிரையான பிறகு சரியான நேரம் காலம் பார்த்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும் எனக் காத்திருந்தீர்களா எனவும் கேள்வி எழுப்பிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வன்முறைக்கு காரணமாக பேசிய பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், ப்ரவேஷ் வர்மா, அபய் வர்மா உள்ளிட்டோர் மீது FIR பதியவேண்டும் என போலிஸுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், இதுதொடர்பாக நாளை பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

Also Read: "பா.ஜ.க சதியே டெல்லி வன்முறைக்குக் காரணம் : உள்துறை அமைச்சர் எங்கே சென்றார்?” - சோனியா காந்தி கண்டனம்!