India

“ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது; விரைந்து இயல்புநிலையை மீட்டெடுங்கள்” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

டெல்லி மாஜ்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. CAA ஆதரவாளர்கள் CAA-வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். பதிலுக்கு போராட்டக்காரர்களும் கற்களை வீசித் தாக்கினர்.

இந்த வன்முறையில் வீடுகள், கடைகள், வாகனங்கள் உள்ளிட்டவை சூறையாடப்பட்டன. இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி போலிஸார் வன்முறையைக் கலைத்தனர்.

டெல்லியில் இன்றும் பல இடங்களில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கர்தாம்புரி பகுதியில் இரு பிரிவினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். மாஜ்புர் பகுதியில் செய்தியாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறையில் காயமடைந்த நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெல்லி வன்முறையில் மக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான கொடூர தாக்குதல் ஆபத்தான விகிதத்தை எட்டியுள்ளது. டெல்லி காவல்துறையை கட்டுப்படுத்தும் மத்திய பா.ஜ.க அரசு விரைந்து செயல்பட்டு இயல்புநிலையை மீட்டெடுக்க வேண்டும். ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “குறுகிய நோக்கம் கொண்டவர்களை தேர்ந்தெடுத்ததற்கான விலையை மக்கள் கொடுக்கிறார்கள்” - ப.சிதம்பரம் வேதனை!