India
“10-க்கும் மேற்பட்ட பெண்களை நிர்வாணமாக்கி கட்டாய மருத்துவ பரிசோதனை” : குஜராத்தில் நிகழும் தொடர் கொடுமை!
குஜராத் மாநிலம் ‘பூஜ்’ பகுதியைச் சேர்ந்த ஸ்ரீசகஜானந்த் மகளிர் கல்லூரி நிர்வாகம், தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவியர் 68 பேரின் ஆடைகளைக் களைந்து, கட்டாய மாதவிடாய் சோதனை நடத்தியது. இது அண்மையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது நடந்த அடுத்த சில தினங்களில் மீண்டும் சர்ச்சைக்குரிய சம்பவம் சூரத் நகரில் நடந்துள்ளது. சூரத் மாநகராட்சியில் கிளார்க் பணியில் 3 ஆண்டுகள் பயிற்சி முடித்தவர்களுக்கு வழக்கமாக நடைபெறும் மருத்துவ பரிசோதனை நடந்தது.
அப்படி நேற்று முன்தினம் நடைபெற்ற பரிசோதனையின்போது, மாநகராட்சி பயிற்சி ஊழியர்களை அரசு நடத்தும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அழைத்துச் சென்று, ஒரே நேரத்தில் பலரை வலுக்கட்டாயமாக முழு நிர்வாண மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்கள் புகார் அளிக்க இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாநகராட்சி அரசு ஊழியர் சங்கத்தினர் மாநகராட்சி கமிஷனரிடம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்துனர்.
இதனிடையே, இந்த தகவல் கிடைத்ததும் தேசிய மகளிர் ஆணையம், குஜராத் அரசின் தலைமை செயலாளர் அனில் முகிம் மற்றும் முதன்மை செயலாளர் டாக்டர் ஜெயந்தி எஸ்.ரவி, ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மருத்துவ பரிசோதைக்கு ஒருபோதும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் ஒரே நேரத்தில் 10 பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து மருத்துவ பரிசோதனை செய்வதை ஏற்கமுடியாது.
அதுமட்டுமின்றி, திருமணமாகாத பெண்ணிடம் “கர்ப்பமாக இருக்கிறீர்களா, ஏற்கனவே கர்ப்பமாக இருந்திருக்கிறீர்களா” என்பது உள்ளிட்ட தனிபட்ட கேள்விகளை மருத்துவர்கள் கேட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது, மனித நேயமற்றது. மருத்துவ சோதனையில் பெண்களுக்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும். தேவையற்ற கேள்விகளை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!