India

“300% கட்டண உயர்வு?” : கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராகக் கொந்தளிக்கும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள்!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும், இலவசமாக வழங்கப்பட்டுவந்த பேருந்து சேவையை மீண்டும் தொடங்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்தும் இன்று போராட்டத்தை துவங்கினர்.

வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் பேரணியாக பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் நோக்கிச் சென்றனர். அப்போது நிர்வாக அலுவலகம் அருகே பல்கலைக்கழகத்தினர், மாணவர்கள் உள்ளே நுழையக்கூடாது என தடுப்புக் கம்பிகள் அமைத்து தடுத்தனர்.

இதையடுத்து, பேரணியாகச் சென்ற மாணவர்கள் தடுப்பு வேலிகளைத் தள்ளிவிட்டு நிர்வாக அலுவலகத்திற்கு உள்ளே சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் கல்விக் கட்டணம் 200 முதல் 300 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.

அதனைக் கண்டித்து மாணவர் பேரவை மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பாக உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணம் மற்றும் புதுச்சேரி மாணவர்களின் இலவச பேருந்து சேவைக்கு நிர்ணயித்த கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் தலையிட்டு மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க நிர்வாகம் மற்றும் மாணவர் பேரவை நிர்வாகிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் கூட்டம் 3 முறை நடந்தது. ஆனால் அக்குழு உயர்த்தப்பட்ட கல்விக் கட்டண உயர்வை திரும்பப் பெறுவது குறித்து ஆக்கபூர்வமான முடிவை மேற்கொள்ளவில்லை.

மாறாக கல்விக் கட்டண உயர்வை திரும்பப் பெற முடியாது என்றும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச பேருந்து சேவைக்கு கட்டணம் வசூலிப்பதிலேயே குறியாக இருந்தது.

இதற்கு மேல் பல்கலைக்கழக நிர்வாக தரப்புடன் பேச்சுவார்த்தை என்பது கண்துடைப்பாகவே அமையும் என்பதால் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர் பேரவை சார்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜே.என்.யூ பல்கலைக்கழகத்திலும் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை திரும்பப் பெறக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: தாக்குதலில் பாதிக்கப்பட்ட JNU மாணவர்கள் மீதே வழக்கு பதிவு: டெல்லி போலிஸார் அராஜகம் - மாணவர்கள் அதிர்ச்சி!