India

“கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பதிலாக மக்களுக்கு நன்றி உடையவர்களாக இருங்கள்” : ப.சிதம்பரம் சாடல்!

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஏழை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை என்றும் வீழ்ச்சி அடைந்துள்ள இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்தப்போவதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அதுதொடர்பான விவாதம் நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள வணிகவியல் கல்லூரி ஒன்றில் இந்திய நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கலந்துகொண்டார்.

அப்போது பட்ஜெட் தொடர்பாக பேசிய அவர், “மத்திய அரசின் அலட்சியத்தால் மீண்டும் பொருளாதார வளர்ச்சி இல்லாத காலக்கட்டத்தை நோக்கி இந்தியா செல்லப்போகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்னை ஏற்படும்போதோ அல்லது அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் அல்லது போர் ஏற்படும்போதோ அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை சமாளிக்க நம்மிடம் பொருளாதார மாற்றுத் திட்டம் இருக்கவேண்டும். அது அவசியமான ஒன்று, ஆனால் அப்படி எந்தவொரு மாற்றுத்திட்டத்தையும் இந்த அரசாங்கம் கொண்டிருப்பதாக தெரியவில்லை.

இந்த அரசாங்கம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைத்ததற்கு பதில் ஜி.எஸ்.டி வரியை குறைத்து கோடிக்கணக்கான மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரித்திருக்கலாம். மேலும், 100 நாள் வேலை திட்டத்திற்கும் அதிக தொகையை ஒதுக்கியிருக்கலாம். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான வாய்ப்பை மத்திய அரசு தவறவிட்டுள்ளது. பொறுப்பான எதிர்க்கட்சி என்ற வகையில் அரசின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களை மத்திய அரசுக்கு நாங்கள் சுட்டிக் காட்டி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: இதுதான் மோடி அரசின் பட்ஜெட் சாதனையா ? : ஒரே நாளில் ரூபாய் 3.6 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!