India

“தேர்தல் நேரத்தில் மட்டும் ‘சௌக்கிதார்’ என அழைத்துக் கொள்பவள் அல்ல நான்” - மம்தா பானர்ஜி தாக்கு!

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்ற பேரணி ஒன்றில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க தலைவர்களை கடுமையாகச் சாடியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் பாங்கான் பகுதியில் இன்று பேரணி மேற்கொண்டார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி. அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை தேச துரோகிகளைப் போல பா.ஜ.க-வினர் சித்தரிக்கின்றனர்.” எனத் தெரிவித்தார்.

மேலும், “தேர்தல் நேரத்தில் மட்டும் தன்னைத் தானே ‘நான் ஒரு சௌக்கிதார்’ என்று அழைத்துக்கொள்ளும் பிரதமர் மோடியைப் போல அல்ல நான். நான் எல்லா நாளும் மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு அறிந்து வருகிறேன்.

பா.ஜ.க தலைவர்களின் தூண்டுதல் காரணமாகவே ஜாமியா பல்கலைக்கழகம் மற்றும் ஷாஹீன் பாக் போன்ற இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள் அங்கு அமைதியான வழியில் போராடும் மக்களை பயமுறுத்தும் நோக்கில் செய்யப்படுகின்றன.

மேற்கு வங்கத்தில் ஒருபோதும் என்.ஆர்.சியை அனுமதிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து வருகிறேன். ஆனாலும் என்.ஆர்.சி மீதான அச்சம் காரணமாக இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “பா.ஜ.க துச்சாதனர்களின் கட்சி. அவர்கள் முகமது பின் துக்ளக்கின் சந்ததியினர். நான் அவர்களைப் போல மக்களிடையே வெறுப்பை பரப்பும் குழுவைச் சேர்ந்தவள் அல்ல” எனத் தெரிவித்தார்.

Also Read: "கையெழுத்துப் படிவங்களை மலையெனக் குவிப்போம்; மத்திய மாநில அரசுகளின் முகத்திரை கிழிப்போம்” - மு.க.ஸ்டாலின்