India

சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக்கி, தனியார் மருத்துவமனைகளை அதிகரிக்கலாம் - பகீர் கிளப்பும் புதிய பரிந்துரை!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து முன்பிருந்த மக்கள் நலத் திட்டங்களை பாழ்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

குறிப்பாக, ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையை நோக்கி மத்திய அரசு செல்கிறது. பெரும்பான்மை பலத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள சில முக்கிய சட்டங்களை தங்களுக்குச் சாதகமாகத் திருத்திக்கொள்ளும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், சுகாதாரத் துறையில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசின் 15வது நிதிக் குழு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரி தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவை அமைத்துள்ளது.

இந்தக் குழுவானது சுகாதாரத் துறை சீர்திருத்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு 120 பக்க அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. அதில், மாநிலப் பட்டியலில் உள்ள சுகாதாரத்துறையை மத்திய அரசின் பொதுப் பட்டியலுக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, அடுத்த 5 வருடங்களுக்குள் 3,000 முதல் 5,000 தனியார் மருத்துவமனைகளை திறப்பதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாகப் பரிந்துரைத்துள்ளது. தனியார் மருத்துவமனையை திறக்கக்கோரிய குழு, “சுகாதார உரிமை அனைவருக்குமான அடிப்படை உரிமை” என வரவிருக்கும் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவின் போது பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

மேலும், 2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் சமமாக இருக்கவேண்டும் என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 % வரை சுகாதாரத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்தவும், இந்த துறைக்கான செலவினங்களை மத்திய, மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் எனவும் அதில் கோரியுள்ளது.

இந்த குழு பரிந்துரைத்த பல அம்சங்கள் பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளுக்குப் பதிலாக தனியார் மருத்துவமனைகளை அதிகளவில் அனுமதிக்கவேண்டும் என்று குழு கூறிவிட்டு, சுகாதார உரிமையை அனைவருக்குமான அடிப்படை உரிமையாக பிரகடணப்படுத்த வேண்டும் என்பது பெரும் அபத்தமாக உள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இந்த குழுவில் கார்ப்பரேட் மருத்துவமனைகளை சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளதால் அந்த குழு இவ்வாறு பரிந்துரைத்துள்ளதாகவும் மருத்துவத்துறையைச் சார்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: “ஜனநாயக நாடு என்ற பெருமையை இழந்தது” : மோடி ஆட்சியில் ஜனநாயக குறியீட்டில் இந்தியா 10 இடங்கள் பின்னடைவு!