India

அறிவுரை என்ற பேரில் மாணவர்களின் நேரத்தை வீணடிக்கிறார் மோடி : கபில் சிபல் சாடல்!

‘பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் பொதுத்தேர்வுகளை எப்படி அணுகுவது, எப்படி தயாராவது என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி 6 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறும்.

இதில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றி அறிவுரை வழங்குவார். அதன் படி, 3வது ஆண்டாக நேற்று டெல்லியில் உள்ள டல்கட்டோரா உள்விளையாட்டு அரங்கில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்பதற்காக சுமார் 1000க்கும் மேலான மாணவர்கள் நேரில் பங்கேற்க வைக்கப்பட்டனர். மேலும், நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளியில் இருந்து காணொளி காட்சி மூலம் பிரதமரின் உரையை கேட்டனர்.

இந்நிலையில், காங்கிரஸின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் மோடியின் இந்த நிகழ்ச்சி குறித்து விமர்சித்து பேசியுள்ளார். அதில், ”பொதுத்தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் அதற்கு மாணவர்களை தயார்படுத்த விடாமல் இவ்வாறு அறிவுரை என்ற பெயரில் அவர்களின் நேரத்தை வீணடித்து வருகிறார் மோடி. இது ஏற்கத்தக்கதல்ல.” என அவர் கூறியுள்ளார்.