India

விடாது போராடும் கேரளா : CAA அரசியல் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை இரு அவைகளிலும் நிறைவேற்றியது.

இச்சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக உள்ளதாகக் கூறி இந்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நாட்டில் முதன்முறையாக மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதோடு, இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படையை சிதைப்பதாகும் என்றும் கூறி வருகின்றனர்.

மாணவர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என குடியுரிமையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக கேரளா, மேற்குவங்கம் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூறிவருகின்றனர்.

இதற்கிடையே, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள அரசு சார்பில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து தற்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு புகார் அளித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க அந்த மனுவில் கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Also Read: “CAA-வுக்கு ஆதரவாக மிஸ்டு கால்?” : பா.ஜ.கவினருக்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி!