India

கவுரி லங்கேஷ் படுகொலை வழக்கு : தபோல்கர் கொலையாளி வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றொரு குற்றவாளி கைது!

கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி, பெங்களூருவில் தனது வீட்டுக்கு வெளியே வைத்து பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் இடதுசாரி சிந்தனையாளர் என்பதால், அவரது கொலையில் இத்துத்வா கும்பல் தொடர்பு இருக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள், இடதுசாரிகள் சந்தேகித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், 2013ம் ஆண்டு புனேவில் தபோல்கர் நடைபயிற்சி சென்றபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு, பிப்ரவரியில் கோவிந்த் பன்சாரே மற்றும் ஆகஸ்டில், எம்.எம்.கல்புர்கி ஆகியோரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

இந்த கொலைகளுக்கு நடுவே ஏதேனும் இணைப்பு இருக்கலாம் என போலிஸார் சந்தேகித்ததன் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், சரத் கலாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது அளித்த வாக்குமூலத்தில், தபோல்கரை தான்தான் சுட்டுக் கொன்றதாகவும், கவுரி லங்கேஷ் கொலையில் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ருஷிகேஷ் தேவ்திகார்

மேலும், 2016 ஆகஸ்ட்டில், பெல்காமில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்து மதத்திற்கு எதிராகச் செயல்படும் நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. அதில் கவுரி லங்கேஷ் பெயரும் இடம்பெற்றிருந்தது.

எனவே, கவுரி லங்கேஷ் கொல்லப்பட வேண்டும் என்று அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பாரத் குர்னே என்பவர் வீட்டில் கொலை பற்றி விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டது” என சரத் தெரிவித்திருந்தார்.

மேலும், இந்தக் கொலை வழக்கில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட்டின் தன்பாத்தில் தலைமறைவாக இருந்த ருஷிகேஷ் தேவ்திகாரை தனிப்படை போலிஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட ருஷிகேஷ் தேவ்திகாரை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் உடந்தையாக இருந்த மற்றவர்களையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.

Also Read: “மக்களை வேதனையில் ஆழ்த்தும் பா.ஜ.க அரசு” : சோன்பத்ரா படுகொலை குறித்து பிரியங்கா காந்தி ஆவேசம்!