India

‘காவிரி கூக்குரல்’ நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பணம் வசூலித்து முறைகேடு? : ஈஷாவுக்கு நெருக்கடி!

காவிரி நதிக்கரையோரம் சுமார் 243 கோடி மரங்களை நடப்போவதாகவும், அதற்காக ஆகும் செலவை மக்களிடம் இருந்து வசூல் செய்யப்போவதாகவும் ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அறிவித்திருந்தார்.

இதற்காக ஒவ்வொரு மரத்திற்கும் 42 ரூபாய் செலவாகும் எனவும், அந்த தொகையை மக்கள் வழங்கவேண்டும் எனவும் ஈஷா மையம் நிதி திரட்டலில் ஈடுபட்டது. இதை விளம்படுப்படுத்த ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டார்.

கர்நாடகா முதல் தமிழ்நாடு வரை இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டு மரம் நடுவதற்காக வசூலில் இறங்கினார் ஜக்கி. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் காவிரி கூக்குரல்’ திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நேற்றைய தினம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி ஹேமந்த சந்தங்கவுர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை தொடங்கிய நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.

அப்போது, இதுபோல மரம் நடுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றால் அது வரவேற்கத்தக்கது. ஆனால் அதற்காக மக்களிடம் கட்டாயமாக வற்புறுத்தி பணம் வசூலிப்பது சரியல்ல எனத் தெரிவித்து, ஈஷா மையம் மக்களிடம் வற்புறுத்தி பண்ம் வசூலிக்கவில்லை என்பதற்கான ஆதாரம் எங்கே எனவும் கேள்வி எழுப்பினார்கள்.

அதுமட்டுமின்றி, கட்டாயமாக நிதி வசூலிப்பதாக வந்தபுகாரை ஏன் மாநில அரசு விசாரணை நடத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். ஒரு குடிமகன் மாநிலத்தின் பெயரில் நிதி வசூலிக்கப்படுவதாக புகார் எழுப்பும் பட்சத்தில் அதை விசாரிப்பது அரசின் பொறுப்பு என ஆளும் பா.ஜ.க அரசை சாடினார்கள்.

அப்போது அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், இதுதொடர்பான புகார்கள் இதுவரை வரவில்லை. மேலும் அரசு நிலத்தில் ஈஷா மையம் எந்தவொரு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யவில்லை என கூறினார்.

ஆனால் அவரின் வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஈஷா மையம் பதிவு செய்யப்படவில்லை, பணத்தை வசூல் செய்ய மாநில அரசிடமோ அல்லது மத்திய அரசிடமோ அங்கீகாரம் பெறவில்லை என தனது கண்டனங்களை பதிவு செய்தார்கள்.

ஆன்மீகம் என்பதால் நீங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் என ஈஷாவிற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் மனுதாரர் ஒரு மரத்திற்கு 42 ரூபாய் வீதம் வசூல் செய்து பல்லாயிரம் கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறுகிறார். இந்தத் தொகையை வசூலிக்கும் போது ஏன் அரசு அமைதி காத்தது? நிகழ்ச்சி தொடர்பாக ஆய்வுகள் நடத்தியதாக அறிக்கை விடுத்ததாக ஈஷா சார்பில் கூறப்படுகிறது.

Also Read: #LIVE | மோடி அரசுக்கு எதிராக ஆண்டின் முதல் பொது வேலைநிறுத்தம் : 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கிறார்கள்!

ஆனால் அந்த ஆய்வு அறிக்கை தொடர்பான எந்தவொரு தகவலையும் அரசிடம் தாக்கல் செய்யவில்லை என்றும் இதற்கு யார் பொறுப்பு என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதுமட்டுமின்றி, பணம் வசூலிப்பதற்கு அனுமதியும் வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்த அரசு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், காவிரி கூக்குரல் மூலம் எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது என்றும், எந்த முறையில் வசூலிக்கப்பட்டது என்றும் ஈஷா அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபடிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.