India

“எழுவர் விடுதலையில் 2018ம் ஆண்டே முடிவெடுக்கப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டது” - மத்திய அரசு தகவல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்க முடியாதென 2018ம் ஆண்டே முடிவெடுக்கப்பட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி, சென்னைஉயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அதில், “10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், என்னை இதுபோல முன்கூட்டியே விடுதலை செய்யவில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நான் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி இயற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு இதுவரை தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.

எனவே என்னை விடுதலை செய்யாமல் சிறையில் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், உயர்நீதிமன்றத்தில் என்னை ஆஜர்படுத்த போலிஸாருக்கு உத்தரவிட வேண்டும். என்னை விடுதலை செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகி, நளினியை விடுவிக்கக் கோரிய மனுவை கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதமே மத்திய அரசு நிராகரித்து உத்தரவிட்டுள்ளது என்று கூறி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.

அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், இந்த வழக்கில் மத்திய அரசு எதிர் மனுதாரராக இணைக்கப்படாத நிலையில் ஆவணத்தைத் தாக்கல் செய்வதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தை எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: “இதனால் தான் சபாநாயகர் முன்பே ஆளுநர் உரையைக் கிழித்தெறிந்தேன்” - ஜெ.அன்பழகன் MLA விளக்கம்!