India

தாக்குதலில் பாதிக்கப்பட்ட JNU மாணவர்கள் மீதே வழக்கு பதிவு: டெல்லி போலிஸார் அராஜகம் - மாணவர்கள் அதிர்ச்சி!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த போராட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது என மாணவர் அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், மாணவர்கள் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் டெல்லி போலிஸார் உடந்தையாக இருந்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்பு ஏ.பி.வி.பி., - ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் திட்டமிட்டு சதி செய்தவை ஊடகங்களின் வாயிலாக அம்பலமானது. ஆனால் தாக்குதல் நடைபெற்று மூன்று நாட்களாகியும் இதுவரை அதுதொடர்புடைய ஒரு நபர் கூட கைது செய்யப்படவில்லை.

இதையடுத்து ஜனவரி 4-ம் தேதி பல்கலைக்கழக விடுதி மற்றும் சர்வர் அறையை சேதப்படுத்தியதாக கூறி தாக்குதலில் படுகாயம் அடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வரும் மாணவர் சங்க தலைவர் ஆஷி கோஷ் உள்ளிட்ட 19 மாணவர்கள் மீது டெல்லி போலிஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீது டெல்லி போலிஸார் பல பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது மாணவர்கள், ஆசிரியகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசியல் கட்சியினர் டெல்லி போலிஸாரின் இத்தகைய நடவடிக்கைக்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தியவர்களை போலிஸார் பாதுகாப்பாக வெளியேற அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, இந்த வழக்கு குற்றப் புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Also Read: “ஏ.பி.வி.பி., வன்முறைக்கு உடந்தையாக இருந்த துணைவேந்தர்” - ஜே.என்.யூ மாணவர் சங்கம் அதிர்ச்சித் தகவல்!