India

“CAA_NRCயினால் சர்வதேச சமூகத்திடமிருந்து இந்தியா தனிமைப்படும்”: மோடி அரசை எச்சரிக்கும் முன்னாள் ஆலோசகர்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என மாணவர்கள், அரசியல் கட்சியினர் நடத்திவரும் போராட்டம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், குடியுரிமை சட்டம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல; எதிர்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்வதாக கூறுகின்றன. பிரதமர் மோடி முதல் கீழ்மட்ட அளவில் இருக்கும் பா.ஜ.க தொண்டர்கள்வரை ஒரே வசனத்தை மக்கள் மத்தியில் பேசி வருகின்றனர்.

மேலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உலக நாடுகள் பல தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் மோடி அரசு கொண்டுவந்த இந்த சட்டத்தால், இந்தியா உலக நாடுகளுடன் இருந்த உறவில் பிளவு ஏற்படும் என வெளிநாட்டு சட்டவல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

சிவசங்கர் மேனன்

அதனையடுத்து தொடர்ந்து தற்போது, தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகிய இரண்டும் இந்தியாவை தனிமைப்படுத்தி விடும் என தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் சிவசங்கர் மேனன் எச்சரித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த கூட்டத்தில் பேசுகையில், “தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகிய இரண்டின் மீதான தனது கவலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை உட்பட, தொடர்ச்சியாக தற்போது கொண்டு வரப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளின் குவிமைய விளைவு என்னாகும் என்றால், ‘நாம் தனிமைப்படுத்தப்படுவோம்’என்பதே.

அதுமட்டுமின்றி, சர்வதேச ஊடகங்களை நாம் பார்த்தாலே தெரியும், இந்தியா மீதான உலக பொதுக்கருத்து தற்போது மாறிவிட்டது.

Also Read: “ஜனநாயகத்தைப் பாதுகாக்க தயாராவோம்” : CAA-வுக்கு எதிராக 11 மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் அழைப்பு!

மேலும், ‘அவர்கள் தங்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்ளட்டும்’என வங்கதேச வெளியுறவு அமைச்சர் கூறுகிறார். நட்பு பாராட்டும் நண்பர்களே இதுபோல விரக்தி கருத்தை தெரிவித்தால் எதிரிகள் என்ன உணர்வார்கள்” என்றார் சிவசங்கர் மேனன்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் சிவசங்கர் மேனனின் எச்சரிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.