India

“இந்த அவமானம் தேவையா?” : CAA-வுக்கு ஆதரவாக ட்ரெண்ட் செய்வதாக நினைத்து அசிங்கப்பட்ட பா.ஜ.கவினர்!

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள் மக்களை ஏமாற்ற நினைத்து அவ்வப்போது அம்பலப்படுவது வழக்கம்.

பா.ஜ.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும், இந்துத்வா கருத்துகளுக்கும் எதிராக, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் அதற்கு எதிராக கருத்துகளை பேசி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வார்கள். இதனை வாடிக்கையாக வைத்துள்ள அந்த கும்பல் பல நேரங்களில் எதை எதிர்க்கிறோம் என்றே தெரியாமல் போலி செய்திகளை பரப்பி மாட்டிக்கொள்வார்கள்.

முன்னதாக கடந்தாண்டு, பா.ஜ.கவிற்கு எதிராக கருத்துத் தெரிவித்ததாக கூறி, Snapchat-க்கு பதிலாக Snapdeal நிறுவனத்துக்கு 1 star rating குடுத்து மொபைல் செயலியை uninstall செய்தார்கள்.

அதையடுத்து Surf Excel வெளியிட்ட மதச்சார்பற்ற விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில் Surf Excel-க்கு பதிலாக Microsoft Excel க்கு 1 star ரேட்டிங் குடுத்தார்கள்.

அதைவிட பெரிய வேடிக்கை, தீபிகா படுகோன் நடித்த ‘பத்மாவதி’ படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு பதிலாக, அனுஷ்காவின் ‘பாகமதி’ படம் வெளியான திரையங்கிற்குச் சென்று ரகளையில் ஈடுபட்டனர். அதையடுத்து தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் CAA வுக்கு பதிலா CCA எனக் குறிப்பிட்டு ட்ரண்ட் செய்துள்ளனர்.

மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், மோடி அரசுக்கு எதிராகவும் ட்விட்டரில் தினமும் ஹேஷ்டேக் ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பா.ஜ.க-வினரால் சில ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் செய்யப்பட்டன.

சமீபத்தில் சமூகவலைதள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் வெளியாகும் பதிவுகள் அனைத்தும் போலி கணக்குகள் மூலம் பகிரப்படுவதாகவும், இதனை ஒரு குறிப்பட்ட கம்பெனி செய்து தருவதாகவும் குற்றம்சாட்டியது.

இதுபோன்ற தில்லுமுல்லு வேலைகளை பா.ஜ.க-வினர் பல முறை செய்துள்ளனர். குறிப்பாக குடியுரிமை சட்டத்திற்கு இஸ்லாமியர்கள் ஆதரவு தருவது போல சித்தரிப்பதற்காக, ட்விட்டரில் இஸ்லாமியர்கள் பெயரில் கருத்துகளைப் பரப்பினர். முன்னதாக அந்த கணக்குகள் இந்து பெயர்களில் இயங்கி வந்ததும் அம்பலமானது.

Also Read: “குடியுரிமை சட்டத்திற்கு இஸ்லாமியர் ஆதரவா?” : முஸ்லிம் பெயரில் இந்துத்வா கும்பலின் பொய் பிரசாரம் அம்பலம்!

அதனையடுத்து தற்போது, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக #IndiaSupportsCAA ஹேஷ்டேக்கிற்கு பதில் #IndiaSupportsCCA என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துள்ளனர்.

பா.ஜ.க தகவல்தொழில்நுட்ப அணி பரப்பிய ஹேஷ்டேக்கில் எழுத்துப் பிழையைக் கூட கண்டுகொள்ளாமல், அப்படியே சமூக வலைதளங்களில் பகிர்ந்து, எழுத்துப்பிழை கொண்ட ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துள்ளனர் பா.ஜ.க ஆதரவாளர்கள். உணர்வோடு கருத்து தெரிவிப்பவர்களுக்கு மத்தியில் பணபலத்தை வைத்து எதையும் செய்துவிடலாம் நினைத்தால் இப்படித்தான் அம்பலப்படுவீர்கள் என ட்விட்டரில் நெட்டிசன்கள் பா.ஜ.கவை விமர்சித்து வருகின்றனர்.