India

“2 ஆலோசனைகளை ஏற்காவிட்டால் இதுதான் அடுத்த ஆலோசனை” - ப.சிதம்பரம் பளிச்!

பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் கடுமையாகச் சிதைந்துள்ளது. பல்வேறு துறைகளும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. அரசின் போதாமை குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தி ஹிந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம், “பா.ஜ.க அரசுக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லை எனக் குற்றம்சாட்டியுள்ளீர்கள்; பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சில ஆலோசனைகள் வழங்கச் சொன்னால் என்ன சொல்வீர்கள்?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ப.சிதம்பரம், “முதலில் பிரதமரிடம் சொல்லவேண்டும். தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள். பணமதிப்பிழப்பு, தவறான முறையில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, விசாரணை அமைப்புகளுக்கு வழங்கப்படும் கூடுதல் அதிகாரங்கள் ஆகியவை நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு ஏற்றதாக இல்லை. இன்றைக்கு எந்த அதிகாரியும் நோட்டீஸ் அனுப்பலாம். முதலில் தாம் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளவேண்டும்.

இரண்டாவது, தவறுக்கான காரணங்களை கண்டறியும் முறையும் தவறு என்பதை இந்த அரசு ஒப்புக்கொள்ளவேண்டும். நேற்று முன்தினம் கூட, தலைமை பொருளாதார ஆலோசகர், இந்த பொருளாதார நெருக்கடி சுழற்சி முறையிலான சிக்கல் தான் என்று கூறியுள்ளார். அதேசமயம் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பல பொருளாதார வல்லுநர்கள், இது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் எனத் தெரிவிக்கின்றனர்.

முதல் இரண்டு ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மூன்றாவது ஆலோசனை, நிதி அமைச்சரே நீங்கள் ராஜினாமா செய்துவிடுங்கள் என்பதுதான்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மூன்று மாதங்களுக்கும் மேலாக மீளமுடியாமல் தவிக்கும் ஆட்டோமொபைல்” - மோடி ஆட்சியின் சாதனை இதுதானா?