India

“நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்திற்கு உதவிய பயிற்சி மருத்துவர்கள் சிக்குகிறார்கள்” - பகீர் தகவல்!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக இருந்த அவரது தந்தை வெங்கடேசனையும் சி.பி.சி.ஐ.டி., போலிஸ் கைது செய்தது.

அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் நீட் தேர்வு ஆள்மாற்றாட்டத்தில் ஈடுபட்ட 4 மாணவ மாணவிகள் மற்றும் இடைத் தரகர்களிடம் சி.பி.சி.ஐ.டி., போலிஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தற்போது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வதற்காக மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவம் படித்து வரும் மாணவர்கள் அதாவது பயிற்சி டாக்டர்கள் உதவி செய்துள்ளனர் என்றும், 9 மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அந்த 9 மாணவர்கள் எந்தெந்த கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்திய மருத்துவ கவுன்சிலின் உதவியை நாடியுள்ளது காவல்துறை.

அதாவது, ஆள்மாறாட்ட விவகாரத்தில் சிக்கியுள்ள 9 மாணவர்களின் புகைப்படங்களை இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி அறிவிப்பு பலகையிலும் ஒட்ட அனுமதிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சிலிடம் குற்றப்பிரிவு எஸ்.பி விஜயகுமார் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனில், ஆள்மாறாட்டம் செய்த மாணவர்களை கல்லூரி முதல்வர்களுக்கு தெரியவில்லை என்றாலும், சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும் என்பதால் இந்த முறையை நடைமுறைபடுத்த காவல்துறை முடிவெடுத்துள்ளது.

இதற்கு மருத்துவ கவுன்சில் தரப்பில் இருந்தும் ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.