India
"பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் மோடி மௌனம் காப்பது ஏன்?” - ராகுல் காந்தி கேள்வி!
நாட்டில் பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காத்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 20ம் தேதி வரை 5 கட்டங்களாகத் தோதல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 23ம் தேதி எண்ணப்படுகின்றன. முதல் கட்டத் தோதல் கடந்த மாதம் 30ம் தேதியும், இரண்டாம் கட்டத் தோதல் கடந்த 7ம் தேதியும் நடைபெற்றன.
நாளை (டிசம்பர் 12) நடைபெறவுள்ள மூன்றாம் கட்டத் தேர்தலுக்காக காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “புதிய இந்தியா உருவாக்கப்படும் என்று வாக்குறுதியளித்து பா.ஜ.க ஆட்சி அமைத்தது. ஆனால், அவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கி விட்டர்களா? ஒவ்வொரு நாளும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். ஆனால், அந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் அவர் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். நாட்டில் தங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பெண்கள் கருதுகின்றனர்.
பா.ஜ.க பல்வேறு பிரிவு மக்களிடையே பிரிவினையையும், வெறுப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அரசுப் பணிகளில் உள்ள காலியிடங்கள் விரைந்து நிரப்பப்படும்” என்றார் ராகுல் காந்தி.
ஜார்க்கண்டின் பட்கர் கௌன் பகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் மற்றொரு தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசும்போது, “ஜார்க்கண்ட் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆளும் பா.ஜ.க அரசு அபகரித்துக் கொண்டது. மாநிலத்தில் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோச்சா-ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மக்களின் நிலங்கள் திருப்பியளிக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!