India
“இடைத்தேர்தல் முடிவால் எங்களுக்கு வருத்தம் ஏதுமில்லை” - கர்நாடகா தோல்வி குறித்து டி.கே.சிவகுமார் பேட்டி!
“எங்கள் கட்சியில் இருந்து பா.ஜ.கவுக்கு தாவியவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், எங்கள் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்.
கர்நாடகத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஏற்கெனவே மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைமையிலான ஆட்சி அரசு அமைந்தது. ஆனால் அதிகாரப்போட்டியால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதனால் முதல்வர் குமாரசாமியின் ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்ந்தது.
இதற்கிடையே 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து முதல்வராக பா.ஜ.கவின் எடியூரப்பா பொறுப்பேற்றார். இந்நிலையில் 17 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்.
இதையடுத்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் 15 தொகுதிகளில் கடந்த டிசம்பர் 5 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. 2 தொகுதிகளில் வழக்கு காரணமாக தேர்தல் நடைபெறவில்லை. 15 தொகுதிகளிலும் 66.49 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்தத் இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ம.ஜ.த ஆகிய மூன்று கட்சிக்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.கவுக்கு போதுமான ஆதரவு இல்லாததால் இந்தத் தேர்தலில் பாஜக 6 முதல் 8 இடங்களில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன. பா.ஜ.க 12 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ம.ஜ.த எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இதுகுறித்து, கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியதாவது, “கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். எங்கள் கட்சியில் இருந்து பா.ஜ.கவுக்கு தாவி வேட்பாளர்களாக நின்றவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்.
ஜனநாயகத்தில் மக்கள் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது. எனவே எங்கள் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் இடைத்தேர்தல் முடிவால் எங்களுக்கு வருத்தம் எதுவுமில்லை.’’ எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!