India

பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட உன்னாவ் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - அதிர்ச்சி தகவல்!

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், கடந்த மார்ச் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதனையடுத்து தன்னை இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக உன்னாவ் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் விசாரணை நடத்தி ஒருவரை மட்டும் கைது செய்தனர். மற்றொருவர் கைது செய்யப்படவில்லை. அதிலும் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு விரைவில் ஜாமீனும் கிடைத்துள்ளது.

மேலும், இதுதொடர்பான வழக்கு உன்னாவை அடுத்துள்ள ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக டிசம்பர் 4-ம் தேதி அந்தப் பெண், ரேபரேலி நீதிமன்றத்துக்குச் சென்று கொண்டிருந்தார்.

தனது கிராமத்திலிருந்து தனியாக நடந்துசென்ற இளம்பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் வழி மறித்துள்ளது. அந்த 5 பேர் கொண்ட கும்பலில் கைதாகி ஜாமினில் வெளிவந்தவரும், தேடப்பட்டு வந்த நபரும் இருந்துள்ளனர்.

அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பெண்ணின் தலையில் தாக்கியதோடு கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளனர். வலி தாங்காமல் மயங்கிவிழுந்த பெண்ணின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி அந்த கும்பல் தீயிட்டுக் கொளுத்தியுள்ளது.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த பொதுமக்கள் அப்பெண்ணை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவணையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து 90% பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிய அந்தப் பெண்ணை மேல் சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு, பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து நேற்று மாலையில் லக்னோவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு சென்று சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அந்தப் பெண்ணை அனுமதித்தனர்.

Also Read: இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி எரித்துக் கொல்ல முயற்சி : உத்தர பிரதேசத்தில் நடந்த அவலம்!

முன்னதாக, லக்னோ மருத்துவமனையில் தன் மீது தீ வைத்து கொளுத்தியவர்கள் பற்றி வாக்குமூலம் அளித்தார். அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு 11.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.