India

106 நாள் சிறைவாசத்துக்கு பிறகு நாடாளுமன்றம் வந்தார் ப.சிதம்பரம் - வெங்காய விலை உயர்வை கண்டித்து முழக்கம்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமினில் வெளியே வந்துள்ளார். உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டதன் மூலம் 106 நாட்கள் கழித்து அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சரான ப.சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு முன்னர், நாட்டின் பொருளாதாரச் சீர்கேட்டையும், பா.ஜ.க அரசின் போதாமைகளையும் தினசரி அம்பலப்படுத்தி வந்தார்.

அவர் சிறைக்குச் சென்ற நேரத்தில்தான் இந்தியாவின் பொருளாதாரமும் மிக மோசமான நிலையை அடைந்தது. இந்தியாவின் இரண்டு காலாண்டு ஜிடிபி மிக மோசமான சரிவை சந்தித்தது. அதேபோல் ஆட்டோமொபைல் துறை பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. மத்திய அரசு எடுத்த சீர்திருத்த நடவடிக்கை எதுவும் பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில் 106 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்துள்ள ப.சிதம்பரம் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தார்.

வெங்காய விலை உயர்வைக் கண்டித்தும், அதுகுறித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பொறுப்பற்ற அணுகுமுறையைக் கண்டித்தும் காங்கிரஸ் எம்.பி.க்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார் ப.சிதம்பரம்.

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறி மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இன்று செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய விஷயங்கள் குறித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவர் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு குறித்துப் பேசக்கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “நான் வெங்காயம் அதிகம் சாப்பிடுவதில்லை” : வெங்காய விலை குறித்து நிர்மலா சீதாராமன் அலட்சிய பதில்!