India

“பசி கொடுமையால் களிமண்ணை சாப்பிட்ட பச்சிளம் குழந்தைகள்” : கேரள அரசை கலங்கவைத்த தாய் - அதிர்ச்சி சம்பவம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவரது கணவர் தென்னை மரம் ஏறும் கூலித் தொழிலாளி. குடிபோதைக்கு அடிமையாகி கணவனால் வறுமையில் 6 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் ஸ்ரீதேவி. அவருக்கு 7 வயதில் இரண்டு குழந்தைகளும், 5 வயதில் இரண் பெண் குழந்தைகளும் 1 வயது மற்றும் 3 மாதங்களில் உள்ள குழந்தைகளும் உள்ளனர்.

கணவன் சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு சரியாக கொடுக்காததால், குடும்பத்தை சமாளிக்க முடியாமல், தனது குழந்தைகளுக்கு மூன்று வேளையும் உணவு கொடுக்கமுடியாமல் சிரமத்தில் வாழ்ந்து வந்துள்ளார் ஸ்ரீதேவி.

இந்நிலையில் “தனது 4 குழந்தைகளுக்கும் உணவு கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். என் குழந்தைகள் பசியால் களிமண்ணைச் சாப்பிடும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களை அழைத்துச் சென்று உணவு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதம், மாநிலக் குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுவுக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுவினர் ஸ்ரீதேவி வீட்டிற்குச் சென்று அவரது 4 குழந்தைகளை மீட்டனர். இரண்டு குழந்தைகள் பச்சிளம் குழந்தைகளாக இருப்பதால், அவர்கள் ஸ்ரீதேவியிடம் இருப்பது அவசியம் என விட்டுவிட்டனர்.

ஸ்ரீதேவி வீடு

இந்தச் சம்பவத்தை அடுத்து ஸ்ரீதேவியின் வீட்டிற்குச் சென்ற திருவனந்தபுரம் மேயர் ஸ்ரீகுமார், ஸ்ரீதேவிக்கு ஆறுதல் கூறினார். மேலும் அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும், வீடு இல்லாதவர்களுக்கு கேரள அரசால் கட்டிக்கொடுக்கப்படும் இலவச வீடு ஸ்ரீதேவிக்கு வழங்கப்படும், குடும்ப வருமானத்துக்காக மாநகராட்சியில் தற்காலிகமாக ஒரு பணி வழங்கவும் உத்தரவிடப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறுகையில், “ஸ்ரீதேவி நிலையை தாமதமாக அறிந்ததற்கு கவலை கொள்கிறோம். இந்த சம்பவம் இனியும் தொடராது. அவர்களது குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும், தற்போது 4 குழந்தைகளையும் அரசு பாதுகாக்கிறது” என அவர் தெரிவித்தார்.

மேலும் நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதார அட்டவணையில், கேரளம் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த நிலையில்,கேரளாவில் வறுமையால் குழந்தை களிமண்ணைத் தின்ற சம்பவம் வேதனை அளிப்பதாகவும், கேரளத்தைச் சேர்ந்த பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மனிதநேயமுள்ள ஏராளமானோர் ஸ்ரீதேவிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

Also Read: சாலை வசதி இல்லாதததால், கர்ப்பிணிப் பெண்ணை தொட்டில் கட்டித் தூக்கிச் சென்ற சம்பவம் : ஈரோட்டில் அவலம்