India

"ப.சிதம்பரம் நாளை நாடாளுமன்றம் வருவார்; கூட்டத்தொடரில் பேசுவார்” - கார்த்தி சிதம்பரம் பேட்டி!

ப.சிதம்பரம் நாளை (டிசம்பர் 5) நாடாளுமன்றத்திற்கு வருவார் என அவரது மகனும், மக்களவை எம்.பி-யுமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது சி.பி.ஐ. சி.பி.ஐ விசாரணைக் காவலை அடுத்து ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்டையே, இதே வழக்கில் அமலாக்கத்துறையும் அவரை கைது செய்தது. சிபிஐ கைதில் இருந்து அவருக்கு ஜாமின் கிடைத்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது.

105 நாட்களாக சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் அளிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். திகார் சிறையில் இருந்துவரும் ப.சிதம்பரம் இன்று இரவே ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் “ கடைசியில் 106 நாட்கள் கழித்தாவது ஜாமின் கிடைத்ததே” என கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

தொடர்ந்து, NDTV செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “என் அப்பா வீட்டுக்கு வருகிறார் என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாளை காலை 11 மணியளவில் அவர் நாடாளுமன்றத்துக்கு வந்துவிடுவார். இதுகுறித்து அவரிடமும், வழக்கறிஞர்களிடமும் ஏற்கெனவே பேசிவிட்டேன். அவர் நாடாளுமன்றம் வருவது உறுதி.

வழக்கைத் தவிர வேறு எதுகுறித்து வேண்டுமானாலும் அவர் பேச அனுமதி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரான அவர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்றுப் பேசுவதற்கு அவருக்கு முழு உரிமையும் உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 106 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வருகிறார் ப.சிதம்பரம் - ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்!