India

அஜித் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்குகள் முடித்துவைப்பு : பதவியேற்ற இரண்டு நாட்களிலேயே பலித்த திட்டம்?

மகாராஷ்டிர மாநிலத்தில் திடீர் திருப்பமாக பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக பதவியேற்ற இரண்டாவது நாளில் அஜித் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை முடித்து வைத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது அஜித் பவார் துணை முதல்வராக இருந்தார். அப்போது, நீர்ப்பாசன திட்டத்தில் 70 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக மும்பை நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில், கடந்தாண்டு நவம்பரில் அஜித் பவாருக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று அஜித் பவார் மீது முந்தைய பா.ஜ.க ஆட்சியில் தொடரப்பட்ட நீர்ப்பாசன திட்ட ஊழல் வழக்கு இன்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அஜித் பவார் மீதான இவ்வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி இதனை முடித்து வைத்துள்ளனர். இதனிடையே நீர்ப்பாசன ஊழல் தொடர்பான 9 வழக்குகளில் அஜித் பவாருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்று ஊழல் தடுப்பு துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து ஊழல் தடுப்பு துறை இயக்குநர் கூறுகையில், "இந்த ஒன்பது வழக்குகளில் அஜித் பவாரின் பங்கு எதுவும் இல்லை; மற்ற வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது. நாங்கள் வழக்கை முடித்து வைத்ததற்கும், அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது." எனக் கூறியுள்ளார்.

அஜித் பவார் மீது பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்குகளைப் பயன்படுத்தியே, பா.ஜ.க தேசியவாத காங்கிரஸிலிருந்து அஜித் பவாரை பிரித்து அவரது ஆதரவைப் பெற்றதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.