India

"மோடிஜி அனுப்பிய பணம் என நினைத்தேன்" : வங்கி குளறுபடியால் வேறொருவரின் பணத்தை எடுத்து செலவு செய்த நபர்!

மத்திய பிரதேச மாநிலம் ரூராய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹூக்கும் சிங். இவர் ஹரியானாவில் தனியார் நிறுவனத்தில் கூலிவேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் இவரது பெயரில் கணக்கு ஒன்றைத் துவக்கியுள்ளார்.

அந்த வங்கிக் கணக்கில் தான் வேலை பார்த்துச் சம்பாதித்த பணத்தை சிறுக சிறுக சேமித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தனது வங்கி கணக்கிலிருந்து மாதம் மாதம் பணம் குறைந்து போவது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த மாதம் ஹூக்கும் சிங், தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கச் சென்றபோது, அந்தக் கணக்கில் 35,400 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் அவரது கணக்கில் 1,40,000 ரூபாய் இருந்திருக்க வேண்டும். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹூக்கும் சிங் வங்கி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஹூக்கும் சிங் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, இரண்டு வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு ஒரே மாதிரியான வங்கி கணக்கு எண்களை மேலாளர் வழங்கியது தெரியவந்தது.

இதில் ஹூக்கும் சிங்கின் பாஸ்புக்கை போலவே ரோனி சிங் என்பவரின் பாஸ்புக்கும், புகைப்படங்களைத் தவிர மற்ற அனைத்து தகவல்களும் ஒரமாதிரியாக இருந்துள்ளது.

பின்னர் இதுதொடர்பாக ரோனி சிங்கை போலிஸார் உதவியுடன் கண்டுபிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், உங்களது வங்கி கணக்கிற்கு புதிதாக இவ்வளவு பணம் வருகிறது. எப்படி வந்தது என தெரியாமல் ஏன் செலவு செய்தீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அப்போது பிரதமர் மோடிஜி தான் பணம் தருகிறார் என்று நினைத்து 6 மாதம் தொடர்ச்சியாக செலவு செய்ததாக கூறியுள்ளார். இதுவரை 89,000 ரூபாய் வரை எடுத்து செலவு செய்துள்ளார். இதையடுத்து, வங்கி அதிகாரிகள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப்போய் உள்ளனர்.