India

இரு அவைகளையும் ஸ்தம்பிக்க வைத்த தேர்தல் பத்திர விவகாரம் - விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த நவம்பர் 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. காஷ்மீர் விவகாரம், சோனியாவுக்கு வழங்கப்பட சிறப்பு பாதுகாப்பு வாபஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதத்தைக் கிளப்பி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கின. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தேர்தல் பத்திர முறைகேடு குறித்து விவாதிக்க, அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்கவேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.

கறுப்புப் பணத்தை கட்சிக்குள் கொண்டு வரவே பா.ஜ.க அரசு, ரிசர்வ் வங்கி விதியை மீறி தேர்தல் பத்திரங்களை வெளியிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, தேர்தல் பத்திர விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்காததால், காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தல் பத்திர விவகாரத்தை முன்வைத்து, மக்களவையிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். பின்னர் அவை விதி குறிப்பு புத்தகத்தைக் காட்டிப் பேசிய சபாநாயகர், “அவையில் அனைவரும் கண்ணியத்தை கடைப்பிடிக்கவேண்டும். இவ்வாறு அமளியில் ஈடுபடக்கூடாது” என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொள்ளாத காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து சுமார் நண்பகல் 12 மணியளவில் வெளிநடப்பு செய்தனர். தேர்தல் நிதிப் பத்திர திட்டம் மூலம் பா.ஜ.க அரசு கறுப்புப் பணத்தை புழங்கச் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.