India

ரஃபேல் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி - தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுள்ளது உச்சநீதிமன்றம்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தத்தில், பல்வேறு ஊழல் நடந்துள்ளது என குற்றம்சாட்டப்பட்டது.

ரஃபேல் போர் விமான பேரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை எனக் கூறி, 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அதே அமர்வு விசாரித்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டு முடித்த நீதிபதிகள் கடந்த மே 10ம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வுபெற இருக்கும் நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.