India

“திணறிவரும் இந்திய பொருளாதாரத்தால் மதிப்பீட்டை 5% ஆக குறைத்த எஸ்.பி.ஐ” : அதிர்ச்சியில் மோடி அரசு!

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக ஆட்டோமொபைல், உணவு உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதால் அசோக் லேலண்ட், மாருதி, மஹிந்திரா, போஷ் இந்தியா போன்ற பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன.

அதனால் அந்நிய முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை திரும்பப் பெறுகின்றனர். குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் மாதத்திற்கான காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்தது.

மேலும் 6 சதவீத வளர்ச்சியை எட்டுவதே கடினம் என்று உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற ஆய்வு நிறுவனங்கள் இந்தியாவை எச்சரித்தன.

அதன்பிறகாவது, இந்திய பொருளாதாரம் வளர்ச்சிக்கோட்டில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவின் கடன் மதிப்பீட்டில் எதிர்மறையான நிலையை அடைந்திருப்பதாகவும் மூடீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படி தொடர்ந்து சறுக்கல்களை இந்தியப் பொருளாதாரம் சந்தித்து வருகிறது.

இந்நிலையில், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை எஸ்.பி.ஐ குறைத்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையை, எஸ்.பி.ஐ வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 6 சதவீதம் என தனது மதிப்பீட்டை தெரிவித்திருந்த நிலையில் 5 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என தனது மதிப்பிட்டைக் குறைப்பதாக எஸ்.பி.ஐ அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், ஆட்டோமொபைல் விற்பனை சரிவு, உற்பத்தித் துறையில் வீழ்ச்சி போன்ற காரணங்களால் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ஜி.டி.பி 4.2 சதவிகிதம் என்ற அளவிலேயே இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.