India

இந்த ஆண்டில் மட்டும் 50 லட்சம் கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்... ஏன் தெரியுமா?

நடப்பு ஆண்டில் மட்டும் 50,40,000 போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களை பலரும் ஆரோக்கியமான வகையில் பயன்படுத்தி வரும் நிலையில், சிலர் (இந்த எண்ணிக்கை மிகப்பெரிய அளவிலானது) தவறான தகவல்களைப் பரப்பவும், தவறான வழிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர்.

தவறான முயற்சிகளுக்காக தொடங்கப்படும் கணக்குகளைக் கண்டறிவதும், நீக்குவதும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 50,40,000 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையை ஏற்று போலி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஃபேஸ்புக் வெளியிட்டுள்ள தகவலில், “ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற போலி கணக்குகளை கண்டறிந்து நீக்கி வருகிறோம். ஆபாசமான மற்றும் தவறான தகவல்கள் பதிவிடப்படும் கணக்குகள், சமூக வலைதள பாதுகாப்பு நடவடிக்கையின் அடிப்படையில் நீக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு 50 லட்சத்து 40 ஆயிரம் ஃபேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து மட்டும் போலி கணக்குகள் தொடர்பாக 50,741 புகார்கள் வந்தன. போலி கணக்குகளை கண்டறியவும், நீக்கவும் ஃபேஸ்புக் நிறுவனம் பெரிய அளவிலான முயற்சிகளைச் செய்து வருகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.