India

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு செய்த மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.

பிரான்ஸிடம் இருந்து இந்தியா 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் குறித்து விசாரணை கோரி பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரிரித்த உச்சநீதிமன்றம் ரஃபேல் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தும் முறையில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தது.

மேலும், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை பிரான்ஸின் டஸ்ஸோ நிறுவனத்தின் இந்திய பங்குதாரராக சேர்த்ததிலும் முறைகேடு உள்ளதற்கான ஆதாரங்கள் இல்லை; போர் விமானங்களை அரசு வாங்குவது தொடர்பான முடிவில் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் மறு ஆய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

இதுஒருபுறமிருக்க, மக்களவைத் தேர்தலின்போது அமேதி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ரஃபேல் ஒப்பந்த தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, "காவலாளி எனக் கூறிக் கொள்பவர் திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டது" என்று தெரிவித்தார். நீதிமன்றத்தின் உத்தரவை தனக்கு ஏற்றாற்போல் திரித்துப் பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் பா.ஜ.க எம்.பி மீனாட்சி லெகி.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தாரே தவிர நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவில்லை என்பதால் அந்த விளக்கத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த அவமதிப்பு வழக்கிலும் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.