India

“அயோத்தி நிலத்தில் இந்து கோவில்... இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்” - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

இந்தியா முழுவதும் மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக கருதப்படும் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

அமர்வின் 5 நீதிபதிகளும் ஒருமித்த முடிவைக் கொண்ட தீர்ப்பை அறிவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசித்தார்.

அதன்படி, “பாபர் மசூதி காலியாக இருந்த இடத்தில் கட்டப்படவில்லை. அங்கு ஏற்கனவே ஒரு கட்டுமானம் இருந்ததை தொல்லியல் துறை அறிக்கை உறுதிசெய்துள்ளது. அதைப் புறந்தள்ள முடியாது. ஆனால், அங்கு முன்னர் ராமர் கோவில் இருந்தததற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், “பாபர் மசூதியை கட்டியது மீர்பாகி. சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ம் ஆண்டில் ராமர் சிலை வைக்கப்பட்டது. மத நம்பிக்கைகள் தொடர்பான விஷயங்களில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. ராமர் பிறந்த இடம் அயோத்தி என இந்துக்கள் நம்புகின்றனர். இந்துக்களின் நம்பிக்கையைக் குலைக்க முடியாது.

ஒருதரப்பின் நம்பிக்கை மற்றவர்களின் நம்பிக்கையை பாதிக்கக் கூடாது. வழிபடும் மக்களின் நம்பிக்கையை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொண்டாக வேண்டும். ஆனால், நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது. ” என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

தொடர்ந்து தீர்ப்பை வாசித்த ரஞ்சன் கோகாய், “1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டத்துக்குப் புறம்பானது. சன்னி வஃக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் மாற்று இடத்தை மசூதி கட்ட அரசு அளிக்க வேண்டும்.

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் 2.77 ஏக்கர் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டத்தை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் வகுக்க வேண்டும். மத்திய அரசு உருவாக்கும் அறக்கட்டளை கோவில் கட்டும் பணிகளை மேற்கொள்ளவேண்டும்” என உத்தரவிட்டார்.