India

28 ஆண்டுகளுக்குப் பின் சோனியா காந்தி குடும்பத்துக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ்!

எஸ்.பி.ஜி என்கிற சிறப்பு பாதுகாப்பு படை பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கி வந்தது. ஆனால், ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்ட பின் சோனியா காந்தி குடும்பத்தாருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 28 ஆண்டுகளாக அதன் பாதுகாப்புக்குள் சோனியா குடும்பத்தினர் இருந்து வந்தனர்.

சோனியா காந்தி குடும்பத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெற்று இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்க மத்திய அரசு முடிவு முடிவெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கும் சிஆர்பிஎப் மூலம் வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "எஸ்.பி.ஜி பாதுகாப்பில் இருப்பவர்கள் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்படும். அவ்வகையில் சோனியா காந்தி குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதில், அவர்களுக்குப் பெரிய அளவுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதால், எஸ்.பி.ஜி.க்குப் பதிலாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நோயில் இருந்தபோதிலும் கூட அவருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை.

ஆனால், பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்று வரும் மன்மோகன் சிங், சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.