India

“கடந்தாண்டு 11.7%, இந்தாண்டு வெறும் 6.6%” .. வரி வருவாய்க்கு வேட்டு வைத்த மோடி அரசு : அதிர்ச்சித் தகவல் !

இந்தியாவில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அக்கட்சி தலைவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். ஆனால், உண்மையில் நிஜம் வேறாக இருக்கிறது.

பா.ஜ.கவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பெரும் பின்னடைவை இந்தியப் பொருளாதாரம் சந்தித்து வருகிறது. இதனை மூடி மறைக்கப் பல வேலைகளை பா.ஜ.க மேற்கொண்டாலும் பெரும் நிறுவனங்களின் முதலாளிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பற்றி வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

எந்தாண்டும் இல்லாத அளவிற்கு பா.ஜ.க அரசினால் சிறு குறு தொழில்கள் மட்டுமின்றி பெரும் நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தை எட்டியுள்ளன. குறிப்பாக கடுமையான வீழ்ச்சி காரணமாக ஆட்டோமொபைல் துறையின் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

இதன் ஒட்டுமொத்த தாக்கமும் இந்தியாவின் வரி வருவாயைப் பாதித்துள்ளது. முன்பு இல்லாத அளவிற்கு வரி வருவாய் சரிவில் இருப்பதாகவும் பொதுக் கணக்குகள் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 2018-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2019-ல் அனைத்து விதமான வரிகள் மூலம் வரும் வருவாய் கணிசமாக குறைந்து இருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

மேலும் இதுகுறித்து கணக்குகள் கட்டுப்பாட்டு அதிகாரி (Controller General of Accounts - CAG) கூறியிருப்பதாவது, “கடந்த ஆண்டில் 11.7 சதவிகிதமாக இருந்த வரி வளர்ச்சி, நடப்பு காலாண்டில் 6.6 சதவிகிதமாக குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, “நேரடி வரி வருவாய் வளர்ச்சி 6.7 சதவிகிதம் முதல் 5.8 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. மறைமுக வரி வருவாய் வளர்ச்சி 16.1 சதவிகிதம் முதல் 7.3 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. வருமான வரி மூலமான வருவாயும் 11.3 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக குறைந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பொருளாதார மந்தநிலை, ஜி.எஸ்.டி, குறுகிய வரி அடிப்படை மற்றும் குறைந்த வரி மிதப்பு (Low Tax Buoyancy) அம்சங்களே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது வரி வருவாய் வளர்ச்சி தற்போது குறைந்திருப்பதற்கு காரணம் என்று கூறப் படுகிறது.

அதேநேரம், நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், பெருநிறுவன வரி வருவாய் 5.5 சதவிகிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. சென்ற நிதியாண்டில் இது 0.6 சதவிகிதமாக இருந்துள்ளது என்பது குறிப்பிட்டதக்கது.

இதுகுறித்து பொருளாதார வல்லுநர் ஒருவர் கூறுகையில், “இந்த புள்ளி விவரங்கள் மத்திய அரசு தவறான பொருளாதார கொள்கையையே பின்பற்றுகிறது என்பதை வெளிவடுத்துகிறது. குறிப்பாக பெரும் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரி சலுகையால் அவர்களுக்கு மட்டுமேதான் பயன் தரும். பொருளாதார அறிஞர்களின் ஆலோசனையை மோடி அரசுக் கேட்க வேண்டும்” எனக் அவர் கூறியுள்ளார்.