India

திருச்சி விமான நிலையம் உள்ளிட்ட 6 விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்க்க திட்டம்? - ஊழியர்கள் கலக்கம்!

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு தனியார் வசம் ஒப்படைப்பதற்கான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக அம்பானி மற்றும் அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதையே திண்ணமாக கொண்டுள்ளது பா.ஜ.க அரசு.

ரயில்வே, விமானம், எண்ணெய் நிறுவனங்கள் என பலவற்றை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி விமான நிலையங்களைப் பராமரிக்கும் பொறுப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

திருச்சி, வாரணாசி, அமிர்தசரஸ், புவனேஷ்வர், இந்தூர், ராஜ்பூர் ஆகிய 6 விமான நிலையங்களின் பராமரிப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன.

இந்த திட்டத்திற்கு இந்திய விமான நிலையங்களுக்கான ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு விமான போக்குவரத்துத் துறை அனுப்பியுள்ளது. இந்த 6 விமான நிலையங்களையும் அதானி நிறுவனம் கைப்பற்ற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே அகமதாபாத், மங்களூரு, லக்னோ உள்ளிட்ட விமான நிலையங்கள் அதானி நிறுவனத்துக்கு குத்தகை என்ற பெயரில் தாரைவார்க்கப்பட்டுள்ளது. இந்த தனியார் மயமாக்களுக்கு விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மேலும் 6 விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிடுவது ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.